ஊரடங்குச் சட்டத்தின்போது மருந்தகங்கள் திறந்திருக்கும் - சுகாதார அமைச்சு அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளாந்தம் வைத்தியசாலைகளிலும் மருந்தகங்களிலும் மருந்துகளைப் பெற்றுக்கொள்ளும் பெருந்திரளான நோயாளர்கள் எதிர்நோக்கியுள்ள அசௌகரியங்களைக் கருத்தில்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மருந்தகங்களைத் திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு, சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி அறிவித்துள்ளார் எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நோயாளர்களின் பதிவேடு மற்றும் மருந்துகளுக்கான பற்றுச்சீட்டுக்களை, ஊரடங்கின்போது பயன்படுத்தக்கூடிய அனுமதிப் பத்திரங்களாகக் கவனத்தில்கொள்ள வேண்டும் எனவும் சுகாதார அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

அதேபோல், மருந்தகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஔடதங்களைக் கொண்டு செல்வதற்கான அனுமதியை வழங்குமாறும் பதில் பொலிஸ்மா அதிபருக்கு சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார் எனவும் சுகாதார அமைச்சு மேலும் கூறியுள்ளது.

Post your comment

Comments

Be the first to comment

Related Articles